அதிகரிக்கும் நீர்வரத்து: பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் மழைநீர் மிக அதிகளவில் வந்ததால், கடந்த 12-ம் தேதி முதல், 18-ம் தேதிவரை பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை, மிதமான மழை பெய்தது. அதுமட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம்- கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 26-ம் தேதி இரவு முதல், 27-ம் தேதி காலை வரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்ததால், அந்த ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீண்டும் உபரி நீரை கடந்த 27-ம் தேதி காலை 9 மணி முதல் நீர் வள ஆதாரத் துறையினர் வெளியேற்றி வருகின்றனர். விநாடிக்கு ஆயிரம் கன அடி என அந்த உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று (28-ம் தேதி) மதியம் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று (டிச.29) காலை நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,135 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.96 அடியாகவும் உள்ளது. எனவே, பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், திருக்கண்டலம், வெள்ளிவாயல்சாவடி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்து வருகிறது நீர வள ஆதாரத்துறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in