2-ம் கட்ட சென்னை மெட்ரோ திட்டம்: 70 ஓட்டுநர் இல்லாத ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

2-ம் கட்ட சென்னை மெட்ரோ திட்டம்: 70 ஓட்டுநர் இல்லாத ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 மற்றும் 5-வது வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்துக்கு (பிஇஎம்எல்) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. முதல் மெட்ரோ ரயில் வரும் 2026ம் ஆண்டு தயாரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடியில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது.

இதையடுத்து, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஒரு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரித்து சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மெட்ரோ ரயில்கள் தயாரித்து சென்னைக்கு அனுப்பப்பட உள்ளன.

இந்நிலையில், 3-வது மற்றும் 5-வது வழித் தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில்களை ரூ.3,657.53 கோடி மதிப்பில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதத்தை பிஇஎம்எல் நிறுவனத்துக்கு கடந்த 28ம் தேதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இருதப்பினரும் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின்கீழ், முதல் மெட்ரோ ரயில் 2026-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து, ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும். அதன் பின், மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் வரும் 2027ம் ஆண்டு மார்ச் முதல் 2029ம் ஆண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும். மேலும், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in