போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தை இந்த வார இறுதிக்குள் நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்
Updated on
1 min read

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்தத்தில் 3 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டதை 4 ஆண்டுகள் என அரசு தன்னிச்சையாக மாற்றியதை அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. 4 ஆண்டுகளாக மாற்றியமைத்தும் 01.09.2023 முதல் நடைமுறைப்படுத்த வேண்டிய 15-வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை 16 மாதங்கள் கடந்தும் முடிவுறாத நிலைதான் உள்ளது. இது தொழிலாளர் நல விரோத போக்காகும்.

இந்நிலையில், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை எவ்வித பயன் தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். காரணம் இப்பேச்சுவார்த்தையில் சிறுபான்மை அளவிலான 13 சங்கங்கள் அடங்கிய பேச்சுவார்த்தை ஒரு நாளிலும், பெரும்பான்மை அளவிலான 73 சங்கங்கள் அடங்கிய பேச்சுவார்த்தை அடுத்த நாளிலும் நடத்தும் அரசின் நோக்கம் என்ன என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அனைவரையும் அழைத்து ஒரே நாளில் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் சந்தேகத்திற்கு இடம் அளிக்காது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கடந்த காலத்தில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுடான பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது தொடரக்கூடாது. பொதுமக்களின் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் அரசுப் போக்குவரத்துத் துறையின் தொழிலாளர்கள் நலன், வருங்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே 01.09.2023 முதல் நடைமுறைப் படுத்த வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை எவ்வித பாகுபாடின்றியும், இந்த வார இறுதிக்குள்ளாகவே 15-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடித்து நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே. வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in