அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் நியமனம்: தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் அறிவுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்
ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் அப்பல்கலைக்கழக வேந்தர் அமைத்த தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆளுநரின் பிரதிநியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட 4 பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழ நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 25ம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக தேடுதல் குழு தொடர்பான அரசாணையை தமிழக அரசு டிசம்பர் 9-ம் தேதி வெளியிட்டது. அந்த அரசாணையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி தலைவரின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.

யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படிதான் பல்கலைக்கழஙகளில் துணைவேந்தர் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேராசிரியர் பி.எஸ்.ஸ்ரீஜித்- டாக்டர் எம்எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முற்றிலும் முரணானது.

எனவே, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றம் தமிழக அரசுக்கு ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில்.... தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்ற விவகாரம் காரணமாக சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழுதான் பல்கலைக்கழக நிர்வாக பணிகளை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in