

திண்டுக்கல்: வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். இந்தமுறை 6 தொகுதிகள் கேட்டுப் பெறுவோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறு (டிச.15) இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் கே.எம்காதர்மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அலுவலகத்தை டெல்லியில் ஜனவரி மாதத்தில் திறக்க உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணி தலைவர்களை அழைக்க உள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்திமில்லாத ஒன்று. நமது நாடு ஒரே நாடுதான். இந்தியாவில் 4698 சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை அனைவரும் இணைந்தது தான் இந்தியா. இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை தான். உலகத்திற்கு வழிகாட்டும் நாடு இந்தியா.
பல்வறு சமுதாயமாக வாழ்ந்துவந்தாலும் இந்தியர் என்ற உணர்வோடு வாழ்கின்றனர். அரசியல் ரீதியாக ஒரே தேர்தல் என்பது சிரமமான ஒன்று. காங்கிரஸ் ஆட்சியின் போது சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான கமிட்டி மாநிலம் வாரியாக கருத்து கேட்கப்பட்டது. இந்த கமிட்டி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது என அறிக்கை தந்தது. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து வருகின்றனர். இதை அவர்களின் கூட்டணிக் கட்சியினரே ஏற்கமாட்டார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகிவிடும். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம். கடந்த முறை மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு பெற்று மூன்றிலும் தோல்வியடைந்தோம். இந்த முறை 6 தொகுதிகள் கேட்போம்.
வக்பு வாரிய சட்டத்தை திருத்துவது தவறு இல்லை. ஆனால் வக்பு சட்டத்தை திருத்துகிறோம் என்ற பெயரில் மாற்றி வருகின்றனர். இதை கண்டிக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.