

புதுச்சேரி: “பல தலைமுறைக்கு தேவையான சொத்துக்களை எனது தந்தை சேர்த்து வைத்துள்ளார். ஆகவே இனி சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். புதுச்சேரி அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும். இப்போது எந்த கட்சியைச் சார்ந்தும் நான் வரவில்லை” என்று லாட்டரி அதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சாரல்ஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசு ஏஎஃப்டி தொழலாளர்களுக்கு இழப்பீடு நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஏஎஃப்டி தொழிற்சாலையை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தொழிலாளர்கள் சார்பில் இன்று (டிச.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜோஸ் சார்லஸ் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்த ஆலையில் 2000 ஊழியர்கள் வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு ரூ.100 கோடி வரை ஊதியம் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர். ஆகவே அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வந்துள்ளோம். இந்த ஆலையை புதுச்சேரி அரசால் நடத்த முடியாவிட்டால், நாங்கள் எடுத்து நடத்தி மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நிலுவைத் தொகையை கொடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக வழங்க உள்ளோம்.
பொதுவாக அனைத்து இடங்களிலும் நலத்திட்ட உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இப்போது புதுச்சேரியில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உதவிகளை செய்கிறோம். எங்களை போன்ற தொழிலதிபர்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போது அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காரணம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் தற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.
பல தலைமுறைக்கு தேவையான சொத்துகளை எனது தந்தை சேர்த்து வைத்துள்ளார். ஆகவே இனி சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். புதுச்சேரி அரசியலில் வர விருப்பம் உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து உரிய நேரம் வரும்போது தெரிவிக்கப்படும். இப்போது எந்த கட்சியைச் சார்ந்தும் நான் வரவில்லை. தொழிலதிபர் என்ற முறையில் இப்போது வந்து உதவிகளை செய்ய வந்துள்ளேன். பல ஆண்டுகளாக முதல்வரால் எதையும் செய்ய முடியவில்லை. அவர் செய்திருந்தால் நான் வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆகவே தான் நாங்கள் வருகிறோம்,” என்று அவர் கூறினார்.