

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ-வான சவுந்தரபாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக முகநூலில் ஆக்ரோஷமாக வெடித்தார். அப்படி சூடாக பேசியவர், தற்போது அடக்கி வாசிக்கிறார். இதன் பின்னணியில், நேருவின் மகனும் பெரம்பலூர் எம்பி-யுமான அருணின் சமாதான சாமர்த்தியம் இருப்பதாகச் சொல்கிறார்கள் திமுக வட்டாரத்தில். லால்குடி தொகுதியை தொடர்ந்து 4-வது முறையாக தன்வசமாக்கி வைத்திருப்பவர் சவுந்தரபாண்டியன்.
அப்படிப்பட்ட தனக்கு கட்சியில் எவ்வித முக்கியவத்துவமும் தருவதில்லை, தனது தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களுக்குக் கூட அமைச்சர் நேருவுக்கு பயந்துகொண்டு அதிகாரிகள் தன்னை அழைப்பதில்லை என முகநூல் வழியாக புலம்பி வந்தார் சவுந்தரராஜன். இதுகுறித்து திமுக தலைமையிடமும் புகார் தெரிவித்தார். இதையடுத்து இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியது தலைமை. இதன் பிறகு தனது முகநூல் பதிவுகளை மறைத்த சவுந்தரபாண்டியன், நேருவுக்கு எதிராக பேசுவதையும் தவிர்த்தார்.
லால்குடி தொகுதியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் இப்போது சவுந்தரபாண்டியன் தலைமையிலேயே நடக்கின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மேடையில் அமராமல் கீழேயே அமர்ந்திருந்தார் சவுந்தரபாண்டியன். அவரை மேடைக்கு வரும்படி நேருவின் மகன் அருண் நேரு எம்.பி கையைப்பிடித்து அழைத்தார். முதலில் வர மறுத்தவர், அதன்பிறகு மேடையில் அமர்ந்திருந்தார். அதுமுதலே சவுந்தரபாண்டியன் அமைதிகாக்கிறார். அதற்குக் காரணம், அருண் நேரு என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சவுந்தரபாண்டியனின் ஆதரவாளர்கள், “ஒரு காலத்தில் தனது சொந்தத் தொகுதியாக இருந்த லால்குடியில் தனக்கு விசுவாசமான ஒருவரை எம்எல்ஏ பதவியில் அமர்த்த வேண்டும் என நினைத்துத்தான் சவுந்தரபாண்டியனைக் கொண்டு வந்தார் நேரு. அவரும் நேருவுக்கு விசுவாசமாகத்தான் இருந்தார். ஆனால், அதற்கான ‘பலன்’ எதையும் அவர் அடையவில்லை. நேரு தரப்பினர் திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதையுமே கிடைக்கவிடுவதில்லை.
அவர்களுக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு. லால்குடியில் சவுந்தரபாண்டியன் 4 முறை ஜெயித்திருந்தும் பொருளாதார ரீதியாக அவருக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. இதைக் கேட்டதால் தான் அவருக்கும் நேருவுக்கும் முட்டிக் கொண்டது. இதையடுத்தே, லால்குடி தொகுதியில் சவுந்தரபாண்டியன் இல்லாமலேயே அமைச்சர் நேரு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் தலைமை தலையிட்டதால் தான் நேரு தரப்பு இப்போது சைலன்டாக இருக்கிறது” என்றனர்.
சவுந்தரபாண்டியனிடம் இதுகுறித்து கேட்டபோது, “நான் அமைதியாக இருக்கிறேன் என்பதால் அவர்கள் (நேரு, அருண் நேரு) மாறிவிட்டதாக அர்த்தம் இல்லை. எந்தக்காலத்திலும் அவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குத் தெரியாமல் கட்சிக்காரர்கள் 2 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாது. அதற்காக தினமும் குறைகூறிக் கொண்டிருக்க நாங்கள் இருவரும் திமுக - அதிமுக இல்லை. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். கட்சித் தலைமையிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு மக்கள் பணிகளை தொடர்கிறேன்” என்றார்.
இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, அடுத்த தேர்தலிலும் சவுந்தரபாண்டியன் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைந்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 2 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கட்சி முடிவெடுத்தால் சவுந்தரபாண்டியனுக்கும் மா.செ வாய்ப்பு தேடி வரலாம். இதையெல்லாம் மனதில் வைத்தே அவர் நேரு தரப்பிடம் பகைமை பாராட்டாமல் இருக்கிறார்” என்கிறார்கள். ஆக, வெளிப்பார்வைக்கு சமாதானமாகிவிட்டது போல் தெரிந்தாலும் உண்மையில், நேருவுக்கும் - சவுந்தரபாண்டியனுக்கும் இடையிலான அதிகார யுத்தம் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது!