

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சக்கர வியூகங்கள் இப்போதே சுற்றிச்சுழல ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் திமுக, அதிமுக தவெக என அத்தனை கட்சிகளும் திருமாவளவனை தங்கள் பக்கம் இழுக்க விரும்புவது ஏன்?
2019 மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக இருந்து வெற்றிபெற்று வருகின்றன. அடுத்த தேர்தலுக்கும் இவர்களது ஒற்றுமை நீடிக்குமாயின் தங்கள் வெற்றி நிச்சயமில்லை என அதிமுக-வும், பாஜக-வும் பலமாக நம்புகிறது. அதனால் தான், புதிதாக வந்துள்ள விஜய் தன்பக்கம் திருமாவளவனை கொண்டுவந்தால் அதைத் தொட்டு இன்னும் சில கட்சிகளை கூட்டணி சேர்த்து தெம்பாக தேர்தலை சந்திக்கலாம் என கணக்குப்போடுகிறார்.
ஏனென்றால், மக்கள் எழுச்சியுடன் அரசியலுக்கு வந்து 1977-ல் தேர்தலை சந்தித்த எம்ஜிஆரே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டார்.
2016-ல் திமுக கூட்டணியை விட, அதிமுக வெறும் ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று ஆட்சியை தக்கவைத்தது. திமுக சிறிய அணியாக கருதிய விசிக-வை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டணி திமுக-வின் வெற்றியை தட்டிவிட்டது. இதனால் அடுத்த தேர்தலில் திமுக சுதாரித்துக் கொண்டது.
இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளுமே ஒரு காலத்தில் அதிமுக அணியிலும் இருந்தவை தான். ஆனாலும் இப்போது அந்தக் கட்சி சிதறிக் கிடப்பதால் மீண்டும் அவர்கள் அந்தப் பக்கம் போக தயங்குகிறார்கள். எனவே தான் நெருடல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு திமுக கூட்டணிக்குள்ளேயே இருக்கிறார்கள்.
காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தேசிய கணக்குகள் இருப்பதால் அவர்களால் அத்தனை எளிதாக திமுக அணியிலிருந்து கழன்றுவிட முடியாது. மதிமுக எம்எல்ஏ-க்கள் சிலரும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்கள். எனவே அவர்களாலும் உறுதியான முடிவெடுக்க முடியாது. எனவே மாற்று அணியை உருவாக்க வேண்டுமானால் அது திருமாவளவனால் மட்டுமே முடியும் என நினைக்கிறது அதிமுக தரப்பு. இதே கணக்கு தவெக-வுக்கும் உள்ளது. திமுக கூட்டணியை எப்படியேனும் உடைக்க பாஜக-வும் காத்துக் கொண்டிருக்கிறது.
மாநிலம் முழுவதும் பரவலான வாக்கு வங்கி விசிக-வுக்கு உள்ளது. பாஜக உடன் பாமக இருப்பதால் எப்படியாவது விசிக-வை தங்கள் பக்கம் கொண்டுவர நினைக்கிறது அதிமுக. தேசிய அளவில் தலித் அரசியல் எழுச்சி வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக இது தொடர்பான சில வியூகங்களை வகுத்து செயல்படும். அதனை சமாளிக்க தங்கள் பக்கம் திருமாவளவன் இருக்கவேண்டும் என திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளுமே நினைக்கின்றன.
எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அவர் ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்தது பட்டியலின மக்களே. அதேபோல தனக்கும் கணிசமான பட்டியலின மக்கள் ஆதரவு இருப்பதாக விஜய் கணிக்கிறார். அதற்கு வலுசேர்க்க அவரும் திருமாவை பக்கத்தில் வைத்துக்கொள்ள பார்க்கிறார். அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் வெளிப்படையாக சொன்னாலும் எடுத்ததுமே அவர் ஆட்சியை பிடிப்பது சுலபமில்லை.
அதேசமயம் சரியான கூட்டணி வியூகங்களை வகுத்தால் அதிமுக-வுக்கு 2026-ல் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அப்படியான பலமான கூட்டணியை அமைக்க அதிமுக-வின் ஒரே துருப்புச்சீட்டு திருமா மட்டுமே. அவர் அசைந்துகொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணியை உடைப்பது சாத்தியமில்லை.
இந்த ஒரு விஷயம் திருமாவளவனின் ஆகப்பெரும் பலமாக மாறியிருக்கிறது. இதைவைத்து அதிமுக-விடம் அதிகாரத்தில் பங்கு எனும் உறுதியை பெற்றுவிட்டால் விசிக-வும் தமிழகத்தின் முக்கிய கட்சியாக மாறலாம் என திருமாவளவனுக்கும் திட்டம் இருக்கலாம். அத்தகைய சூழல் தகைந்தால் திமுக-வும் தொகுதிப் பங்கீட்டில் திருமாவுக்கு தாராளம் காட்டும். எனவே இப்போதைய சலசலப்புகள் எப்படியும் நன்மையிலேயே முடியும் என்பது விசிக-வின் வியூகம்.
2 எம்பி-க்கள், 4 எம்எல்ஏ-க்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என இப்போது அரசியல் பொற்காலத்தில் இருக்கிறது விசிக. இதனை சரியாக பயன்படுத்தவே ஆதவ் அர்ஜுனா போன்ற தேர்தல் வியூகவாதிகளை கையில் வைத்துக்கொண்டு, அடுத்தகட்ட அங்கீகாரத்தைப் பெற அக்கட்சி முயற்சி செய்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அவர்கள் சொல்வது போல இது திருமா காலமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!