மாணவியின் கல்வி கட்டணத்தை மாவோயிஸ்ட் செலுத்தியதாக என்ஐஏ நடவடிக்கை: ஐகோர்ட் தலையிட மறுப்பு

மாணவியின் கல்வி கட்டணத்தை மாவோயிஸ்ட் செலுத்தியதாக என்ஐஏ நடவடிக்கை: ஐகோர்ட் தலையிட மறுப்பு
Updated on
1 min read

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியின் கல்விக் கட்டணத்தை மாவோயிஸ்ட் செலுத்தியதாகக் கூறி அந்த கட்டணத்தை முடக்கி என்ஐஏ எடுத்த நடவடிக்கையில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவி ஒருவருக்கு, ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் அமைப்பின் மூலமாக கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த தொகையை முடக்கி தேசிய புலனாய்வு முகமை உத்தரவிட்டது. தேசிய புலனாய்வு முகமையின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மாணவி தரப்பில், தற்போது கல்லூரியில் ரேங்க் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள மனுதாரரின் கல்வி கட்டணத்தை தேசிய புலனாய்வு முகமை முடக்கி வைத்துள்ளதால் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தேசிய புலனாய்வு முகமை மனுதாரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது” என வாதிடப்பட்டது.

ஆனால், அதையேற்க மறுத்த நீதிபதிகள், தேசிய புலனாய்வு முகமை அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளித்து, கல்விக் கட்டணத்தை முடக்கி வைத்ததை நீக்கக்கோரலாம். நன்றாக படிக்கும் மருத்துவ மாணவி, எதிர்காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சேரமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஜோர்டான் போன்ற நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளில் நன்றாக படித்தவர்கள் தான் சேருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in