தென்தமிழகத்துக்கு ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் இருந்து இயக்கப்படும்: உரிமையாளர்கள் தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தென்தமிழகத்துக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பணிமனை மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை முதல்வர் நேற்று முன்தினம் (டிச.06) திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன் படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பதிகளுக்கு இயக்கப்படும். மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் இசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறோம். இந்த பேருந்து நிலையம் அந்த பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத் தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in