“ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராக உள்ளது” - திருமாவளவன்

“ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராக உள்ளது” - திருமாவளவன்
Updated on
1 min read

மதுரை: ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக் கால செயல்பாடு விசிகவின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையிலுள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசியளவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. புதிய கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவையில்லை. திமுக கூட்டணியை கட்டுப்பாடு இன்றி சிதறடிக்கவேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சதி திட்டமாக இருக்கும்.

அதிமுக, பாஜகவின் நோக்கமும் தொடர் வெற்றியை சட்டமன்றத்திலும் பெற்று விடாமல் இக்கூட்டணியை சீர்குலைப்பதே நோக்கம். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என, சிலர் முயற்சிக்கின்றனர். கூட்டணிக் கட்சியில் எங்களுக்கு ஒரு அழுத்தமும் இல்லை. அதற்கான சூழலும் அங்கில்லை. திமுக அழுத்தம் கொடுத்திருக்கிறது என்றால் ஆரம்பத்திலேயே அப்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என, சொல்லி இருப்பேன். அது ஒரு யூகமாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. நான் சுயமாக எடுத்த முடிவு.

விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய் திமுக அரசை முதன்மை எதிரி என, வெளிப்படையாக அறிவித்த நிலையில், நானும், அவரும் நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாமல் இருந்தாலும் அதையும் அரசியலாக்குவர். இதற்காக பலர் காத்திருக்கின்றனர். விஜய் மீது எனக்கு ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.

துணை பொதுச் செயலாளர்கள் 10 பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போதும், கட்சிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்படும்போதும், தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி நடைமுறை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை என்றால் உயர்நிலைக் குழு கவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்டோர் மீதான குற்றச்சாட்டு எந்தளவுக்கு முகாந்திரம் உள்ளது என, உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் தலைவரின் கடமை. எனவே, ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கின்றனர். இது பற்றி கட்சி தலைமையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருகின்றனர். இது குறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி உள்ளோம். இது தொடர்பான முடிவு விரைவில் வெளிவரும். என்னை கட்டுப்படுத்தி இயக்க யாரும் முயற்சிக்கவில்லை.அதற்கான சூழலும் கிடையாது.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in