

பல்லாவரம்: பல்லாவரத்தில் வயிற்றுப்போக்கால் இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கன்டோன்மென்ட் மற்றும் தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பாதிப்படைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதன் விளைவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
பல்லாவரம் கன்டோன்மென்ட், 6-வது வார்டு, மலைமேடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாளும், தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டு, காமராஜர் நகரில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் பாலாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மலைமேடு பகுதிக்கு புதன்கிழமையும், காமராஜர் நகருக்கு 2 நாட்களுக்கு முன்னரும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களைக் காட்டிலும் தற்போது விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், கழிவுநீர் கலந்து நிறம் மாறிய நிலையில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு அப்பகுதிகளை சேர்ந்த பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அங்கு, சிலர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். சிலர் தனியார் மருத்துவமனையிலும், சென்னையில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வியாழக்கிழமை காலை பலர் இதே பாதிப்புகளால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 18 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பல்லாவரம் காமராஜர் நகரை சேர்ந்த திருவீதி கிருஷ்ணன் (56) என்பவர் ஏற்கெனவே உயிரிழந்தார். அதேபோல் கன்டோன்மென்ட் பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோகனரங்கம் (47) என்பவர் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 19 பேரும், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் ஆய்வு: வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதை அடுத்து, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சுப்பிரமணியன், அன்பரசன் மற்றும் பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று விவரத்தை கேட்டறிந்து பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், குடிநீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக கிங் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் முகாமிட்டு வீடாக சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதனிடையே, செங்கல்பட்டு மேற்கு, சென்னை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெருங்குடி கே.பி. கந்தன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தவெக குற்றச்சாட்டு: பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி அனிஷ் கூறும்போது, “எங்கள் பகுதியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. அப்படி செய்யப்படும் குடிநீரும் தரமற்ற நிலையில் உள்ளது. கடந்து சில நாட்களாக விநியோகப்பட்ட குடிநீர் கடும் துர்நாற்றத்துடனும் கழிவுகள் கலந்தும் இருந்தது. இது குறித்து நாங்கள் புகார் தெரிவித்தோம். ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், தண்ணீர் குழாய்கள் அனைத்தும் பள்ளத்தில் உள்ளது. தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் திண்டாடுகின்றனர். தூய்மைப் பணியை சரிவர மேற்கொள்வதில்லை. எங்கு பார்த்தாலும் கழிவுகள் கொட்டி கிடக்கிறது. குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடு இந்த பாதிப்புகளுக்கு காரணம். ஆனால், அதிகாரிகள் தேவையில்லாமல் குடிநீரில் இல்லை, உணவில்தான் கலந்துள்ளது என பொது மக்களிடம் தெரிவித்து திசை திருப்புகின்றனர். உண்மையைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு உதவாமல் அவர்களை மிரட்டும் தோனியில் சுகாதாரத் துறையினர் செயல்படுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
அமைச்சர் விளக்கம்: இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், “பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கும், வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் 33 பேர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு புற நோயாளிகளாக வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். இதில், 14 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் இரண்டு பேர் என மூன்று பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சிகிச்சையில் இருப்பவர்களை பொறுத்தவரை தாம்பரம் அரசு மருத்துவமனையில் 19 பேரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவரும், இரண்டு பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வயிற்றுப்போக்கு. தாம்பரம் மருத்துவமனையை பொறுத்தவரை வயிற்றுப்போக்குக்காக இவர்கள் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட தொடங்கியவுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போன்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் விரைந்து வந்து அவர்களைப் பார்த்துள்ளனர்.
அந்த வகையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கின்ற 19 பேரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்ற சிகிச்சைகள் குறித்தும், அவர்களின் நலன் குறித்தும் விசாரித்து வந்துள்ளோம். இதில் திருவீதி கிருஷ்ணன் (56) மாங்காடு பகுதியை சேர்ந்தவர். உறவினர் வீட்டுக்கு வந்து இங்கு காமராஜர் நகரில் தங்கி இருந்துள்ளார். இன்னொருவர் மோகனரங்கம் (42). இவர்கள் இரண்டு பேரும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். பிரேத பரிசோதனை விரைந்து நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இவர்களுக்கான பாதிப்பு என்னவாக இருக்கும் என்று ஆராய்வதற்கு மாவட்ட ஆட்சியர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அந்தப் பகுதிக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
குடிநீரில் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்கின்ற ஒரு சந்தேகம். அதுவும் கூட மலைமேடு என்கின்ற ஒரு டிஃபன்ஸ் பகுதியில் இருக்கின்ற ஒரு குடியிருப்பு. அங்கிருந்து தான் இவர்களுக்கு குடிநீர் வருகின்றது. அந்தக் குடிநீரில் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்ற வகையில் தற்போது அந்தக் குடிநீரின் மாதிரியை கிங் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக, குடிநீர் மாதிரி பரிசோதனை முடிவுகள் என்பது வருவதற்கு இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். ஆனாலும் கூட இந்தப் பிரச்சினையை தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு மிக விரைவில் அந்தப் பரிசோதனை முடிவுகளை பெற வலியுறுத்த விரும்புகிறோம்.
இந்நிலையில், நம்முடைய துறையின் சார்பில் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் ஏற்ப அந்தப் பகுதியை சுற்றி ஆறு இடங்களில் மருத்துவ முகாம்கள் போடப்பட்டு மக்களுக்கு அங்கேயே போதுமான மருத்துவ வசதிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் காலையிலிருந்து இங்கு வந்து அவர்களுக்கு தேவையான வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த மருத்துவமனையை பொறுத்தவரை அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும், மருந்து வசதிகளும் போதுமான அளவிற்கு கை இருப்பில் உள்ளது. 88 வயதான வரலட்சுமி என்பவர் ஏற்கெனவே பல நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தவர். அவரும் இறந்து இருக்கிறார். திருவீதி கிருஷ்ணன் மற்றும் மோகனரங்கமும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையின் முடிவில் நிச்சயம் தெரிய வரும். அதையும் கடந்து குடிநீரின் மாதிரி தற்போது அனுப்பப்பட்டுள்ளது. குடிநீரால் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்பதும் விரைவில் கண்டறியப்படும்.
இப்போது உடனடியாக நமது மாநகராட்சி ஆணையர் குடிநீரை பொதுமக்கள் இனிமேல் பருகுவதற்கு தடை விதித்து மாநகராட்சி சார்பில் வாகனங்களின் மூலம் குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியின் தலைவர் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகின்ற வகையிலேயே செய்திகளை சொல்வதும், தொடர்ந்து பதற்றச் சூழலை உருவாக்குவது மாதிரியான செய்திகளை பதிவிடுவதுமே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது கூட இந்த மருத்துவமனையில் 30 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மூன்று பேர் இறந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லி இருக்கின்றார். இங்கு 19 பேர் இருக்கிறார்கள் என்பதை உண்மை. இரண்டு பேர் இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். ஒருவர் படுத்த படுக்கையாக இருந்த 88 வயது நிரம்பியவர் இறந்திருக்கிறார் என்றாலும் இவர்களது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகும், குடிநீர் மாதிரியின் பரிசோதனைக்குப் பிறகும் தெரியவரும். அதை நாங்கள் செய்திக் குறிப்பின் வாயிலாக அறிவிப்போம்” என தெரிவித்தார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, “கன்டோன்மெண்ட் 6-வது வார்டிலும், தாம்பரம் மாநகராட்சி 13 வது வார்டிலும் உள்ளவர்களில் 23 பேர் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர், குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் மொத்த மக்களும் அந்த பாதிப்பு இருந்திருக்கும், குரோம்பேட்டை மருத்துவமனையில் 5 பேரும் கன்டோன்மெண்ட் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது ஆய்வு செய்ததில் குடிநீரில் எதுவும் கலக்கவில்லை. உணவில்தான் ஏதோ கலந்த மாதிரி தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள், இனி யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது” என்று தெரிவித்தார்.