

புதுச்சேரி: இடையார்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தின் இணைப்பு சாலை திடீரென உள்வாங்கி சேதமடைந்தது. இதனால் கடலூர்-புதுச்சேரி சாலையில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி முதல் அதி கனமழை பெய்தது. இடைவிடாது கனமழையால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது. மேலும் சங்கராபரணியாறு, தெண்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் தண்ணீர் புகுந்தது. சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
தமிழக பகுதியான கங்கானாங்குப்பம் முதல் ரெட்டிச்சாவடி வரை கடலூர்-புதுச்சேரி சாலையில் பல இடங்களில் தண்ணீர் சாலையை கடந்து பாய்ந்ததால் 2 நாட்களுக்கு மேலாக அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலையும் மிகுந்த சேதமடைந்தது. புதிய நான்கு வழிச்சாலை வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன. நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து சீரானது. இந்நிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் உள்ள சிறிய பாலத்தின் மேற்கு பகுதி இணைப்பு சாலை இரவில் திடீரென உள்வாங்கியது.
உடனே தவளக்குப்பம் சட்டம்-ஒழுங்கு போலீஸார் மற்றும் கிருமாம்பக்கம் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ பாஸ்கர்(எ)தட்சிணாமூர்த்தி ஆகியோர் பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டனர்.
கனமழையால் பாலத்தின் அடியில் தண்ணீர் அதிகளவு சென்றதால் பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்தது தெரியவந்தது. மேலும் இந்த பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள தனியார் படகு குழாம் தரப்பில் இங்குள்ள கிளை ஆறு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாலத்தை தண்ணீர் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாலத்தை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதன்பின்னர் பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அருகிலுள்ள பழைய பாலத்தின் வழி சீரமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பப்பட்டது. ஆனால் ஏற்கெனவே பெய்த கனமழையால் பழைய பாலம் சேதமடைந்துள்ள நிலையில் அதில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் முருங்கப்பாக்கம் பகுதியிலும், தவளக்குப்பம் பகுதியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பிவிடப்படுகிறது.
இன்று சேதமடைந்த பாலத்தின் இணைப்புச் சாலையை சீரமைக்கும் பணியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரூ.40 லட்சம் செலவில் பாலத்தின் இணைப்பு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, அதனை முழுவதும் காங்கிரீட்டால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை இன்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, கடந்த 5 நாட்களாக பெய்த கனமழை மற்றும் வீடுர், சாத்தனூர் அணைகள் திறப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலமானது சேதமடைந்துள்ளது.
ரூ.40 லட்சம் செலவில் பாலம் சரி செய்யப்பட்டு வருகிறது. புதிய பாலம் கட்ட மத்திய அரசிடம் கோரி ரூ.15 கோடி நிதி பெற்றுத்தர வேண்டும் என்று துணைநிலை ஆளுநர், முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான ஒப்புதலை பெற்றுத்தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். அந்த நிதி கிடைத்தவுடன் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். அதன்பிறகு கடலூர்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரான முறையில் அமையும். தற்போது சீரமைக்கப்படும் பாலம் பணி விரைவில் முடிக்கப்படும். நாளை முதல் போக்குவரத்து இயங்கும். என்றார்.