

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை, சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச் சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக, தேமுதிக, பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 20 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ளச் சாராய வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும். தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடியது. இவ்வாறு விசாரணையை மாற்றி இருப்பது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும். இதன்பிறகு இது குறித்து சிபிஐ முதலில் இருந்து விசாரிக்கத் தொடங்கினால் காலதாமதம்தான் ஏற்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.