Published : 23 Jun 2024 01:12 PM
Last Updated : 23 Jun 2024 01:12 PM

எதனால் கள்ளச் சாராய மாவட்டமானது கள்ளக்குறிச்சி? - ஓர் அலசல் | HTT Explainer

படத்தில் நீங்கள் பார்ப்பது கள்ளக்குறிச்சி நகரின் பிரதான சாலை. சாலையைத் தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கு நடுவில் உயர்ந்த கட்டிடமாக மாவட்ட நீதிமன்ற வளாகக் கட்டிடம் காட்சியளிக்கிறது. இதன் அருகிலேயே கள்ளச் சாராய விற்பனை கொடி கட்டி பறந்திருக்கிறது. படம்: எம்.சாம்ராஜ்

கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலேயே கள்ளச் சாராய உயிரிழப்பு அதிகம் நிகழ்ந்த மாவட்டங்களில் ஒசூருக்கு அடுத்த படியாக கள்ளக்குறிச்சி உள்ளது. அதையடுத்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பிடித்திருக்கிறது.

கடந்த 2002-ம் ஆண்டு பண்ருட்டி அருகே நிகழ்ந்த கள்ளச் சாராய சம்பவத்தில் 53 பேரும், 2008-ம் ஆண்டு கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் ஓசூரை ஒட்டிய பகுதிகளில் நிகழ்ந்த கள்ளச் சாராய சம்பவத்தில் 180 பேரும் உயிரிழந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மட்டுமே 60 பேர் உயிரிழந்தது அதிகபட்சமாக கருதப்படுகிறது. இதன்பிறகும் கள்ளச் சாராய விற்பனைகள் தொடர்ந்தாலும், உயிரிழப்பு என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லாமல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில் கடந்த 2023-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 25 பேர் வரை உயிரிழந்தனர். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் தற்போது நடந்துள்ள கள்ளச் சாராய மரணத்தில் நேற்று மாலை வரை 54 பேர் உயிரிழந்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயத்தை நாடியவர்களில் அனைவருமே அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள்தான்.

கள்ளக்குறிச்சி வியாபார மையமாக திகழ்கிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளதால் மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் சற்று அதிகம். இது தவிர ஜவ்வரிசி, நெல், மரவள்ளி, அன்றாட காய்கறி போன்ற மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். தற்போது பேசுபொருளாகியுள்ள கருணாபுரத்தில் உயிரிழந்த பெரும் பாலானோர் கூலித்தொழிலாளிகள். நாளொன்றுக்கு ரூ.500-க்கும் குறைவாகவே சம்பாதிக்கும் நிலையில், அந்தத் தொகையில் யாரும் டாஸ்மாக்கை நாடுவதில்லை.

மாறாக 250 மி.லி கொண்ட ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு குறைந்த விலையில் கிடைப்பதோடு, அதிக போதையும், உடல் வலி போக்கும் வலி நிவாரணியாக இருக்கும் எனக் கருதி கள்ள ச்சாராயத்தை அணுகி அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது தான் வேதனை. குறைந்த விலையில், அதிக போதை சுகம் கிடைக்கும் என்ற கருதி வாங்கி அருந்தி, அவர்களது உயிருக்கு அரசின் நிவாரணம் மூலம் இன்று விலை பெற்றிருக்கின்றனர்.

கல்வராயன் மலையில் இருந்து..: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய மலை கல்வராயன் மலை, இங்கு 15 பஞ்சாயத்துகளின் கீழ் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிராமங்களை இணைக்க மண் சாலைகள் மட்டுமே உள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் செய்வதுதான். ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் பல குடும்பங்கள் வறுமையின் பிடியில்தான் உள்ளது.

கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை என 4 மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ளது. மலைவாழ் மக்களின் வறுமையை சாராய வியாபாரிகள் முழுமையாக பயன்படுத்தி தங்கள் தொழிலை தடையின்றி தொடர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பலர் படித்தும் வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 4 மாவட்டங்களைச் சேர்ந்த இளையோரில் சிலர், கல்வராயன் மலையில் முகாம் அமைக்கின்றனர்.

மலை கிராமங்களில் நீரோடை, தண்ணீர் வசதி உள்ள பகுதியை இவர்கள் தேர்வு செய்கின்றனர். நகர பகுதியிலிருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை கொண்டு வந்து, அடர்ந்த வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி, பேரல்களில் ஊறல் போடுகின்றனர். சேத்துார், ஆரம்பூண்டி, மேல்பாச்சேரி, கிணத்துார், கெடார் என அடர்ந்த வனப்பகுதிகள் கொண்ட கிராமங்களில் தயாரித்து மலையிலிருந்து சமதள பகுதிக்கு கடத்துகின்றனர்.

கல்வராயன் மலையின் அடிவார பகுதிகளான சின்னசேலம், கல்லாநத்தம், சங்கராபுரம், மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் வழியாக சாராயம் கடத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து விழுப்புரம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கிறது. மொத்த வியாபாரிகள் தங்கள் மாவட்ட பகுதியில் சில்லறை வியாபாரிகளுக்கு தலா 100 லிட்டர் வீதம் விற்பனை செய்கின்றனர். இந்த சாராயத்தை விற்பனை செய்ய பொது ஏலம் விடப்படுவது ஊரறிந்த ரகசியம்.

சாராய விற்பனைக்கு ஏலம் எடுக்கும் சில்லறை வியாபாரிகள் தங்கள் சரக்கின் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வீரியத்தை கூட்டவும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை கலக்கின்றனர். இதனால் கள்ளச்சாராயம், விஷ சாராயமாக உருவெடுத்து உயிர்களைக் குடிக்கிறது. கல்வராயன் மலை பகுதியில் அடிக்கடி மதுவிலக்கு போலீஸார் ரோந்து சுற்றி கள்ளச் சாராய ரெய்டு நடத்துகின்றனர். சாராய ஊறல்களை அழிக்கின்றனர். 50 ஆயிரம் லிட்டர் தயராகும் இடத்தில் 500 லிட்டர் அழிப்பதால் சாராயம் ஒழிந்தபாடில்லை.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாராய வியாபாரிகளின் சாம்ராஜ்யம் கல்வராயன் மலையில் கொடி கட்டி பறக்கிறது. இவர்களிடமிருந்து தேவையான கவனிப்பு சம்பந்தப்பட்டோருக்கு செல்கிறது என்கின்றனர் மலைவாசிகள். இதனால்தான் விஷ சாராய உயிரிழப்பு ஏற்படும் போது ரெய்டு நடப்பதும், பின்னர் அடங்குவதும், மீண்டும் உயிரிழப்பு ஏற்படுவதுமாக உள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்ட கல்வராயன் மலைப் பகுதி.

எவ்வாறு தடுக்கலாம்?: தடுக்க என்ன செய்யலாம் என விசாரித்தால் பலரும் கேட்பது வேலைவாய்ப்பைதான். கல்வராயன் மலையில் ஜவ்வரிசி தொழிற்சாலை, கடுக்காய் தொழிற்சாலை அமைத்துக் கொடுத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கல்வராயன் மலையைச் சுற்றியுள்ள அனைத்து வழிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். சாராயம் காய்ச்சும் மூலப்பொருட்கள், பேரல் போன்றவற்றை மலைக்கு கொண்டு சென்றாலே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சிஐடியூ மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி கூறுகையில், “விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலைகள் இல்லை. விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். பலரும் கோயம்பேட்டுக்கு மூட்டை தூக்கச் செல்கின்றனர். அதுவும் குறைந்த சம்பளத்தில்; அரசு முறையான தொழில்சார் நடவடிக்கைகளை ஊக்குவித்து, தகுந்த வேலைவாய்ப்பை உருவாக்காவிட்டால் இப்பாதிப்பை கட்டுப்படுத்துவது கடினம்.

கள்ளக்குறிச்சி நகருக்குள் நவீன அரிசி ஆலைகள் உள்ளன. விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை உருவாக்கலாம். பால் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு இங்குள்ளது. முதலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பால் பண்ணை அமைக்க உதவலாம்.

கல்வராயன் மலை வாழ் மக்களைக்கொண்டு வாசனைப் பொருட்கள் தயாரிப்பு, பால் பண்ணை அமைத்தல், ஆவின் பால்கவர் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் பொருளால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்புக்கூடம் உள்ளிட்ட சிறு தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும். மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தலாம். மாவட்டத் அரசு உதவவேண்டும். தொழிற்சாலைகள் கொண்டு வர கவனம் செலுத்தவேண்டும்" என்றார்.

மாவட்ட தொழில் மையம் என்ன செய்கிறது? - ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி தொழிலை அதிகரிக்க இயங்கி வரும் மாவட்டத் தொழில் மையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை என்ன செய்திருக்கிறது என்பதை அறிய மாவட்ட தொழில் மைய மேலாளரை தொடர்பு கொண்ட போது, மத்திய அரசு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட கடனுதவிகள் குறித்து பேசினார். ஆனால் அதன் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றனர், எத்தனைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என்றபோது முறையாக பின்னர் வழங்குகிறோம் என்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் போட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்திருப்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது, அது அடுத்த ஆண்டு தனது பணியை தொடங்கும் என்பதால், அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திக்கிறது.

இந்தியாவிலேயே அந்நிய முதலீட்டை ஈர்த்து தமிழகத்தில் தொழில்புரட்சி செய்து வருவதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக அமைச்சர்கள், அனைத்தையும் மாநிலத் தலைநகரில் அமைப்பதைக் காட்டிலும், மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி, ஊரகப் பகுதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். இதுவே பின்தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் படித்த இளைஞர்களின் ஒட்டுமொத்த கருத்தாகவுள்ளது. இதை தமிழக அரசு நிறைவேற்றுமா?

- செ.ஞானபிரகாஷ், ந.முருகவேல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x