வங்கக்கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: புயலாக மாற வாய்ப்பு

இடம்: சென்னை | படம்: எம்.ஸ்ரீநாத்
இடம்: சென்னை | படம்: எம்.ஸ்ரீநாத்
Updated on
2 min read

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று (நவ.26) மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ஃபெங்கால் (FENGAL) எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் பெயர் சவுதி அரேபியா வழங்கியதாகும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ஃபெங்கல் (FENGAL) என பெயரிடப்படும். இது சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: இதற்கிடையில், திங்கள்கிழமை இரவு முதலே தமிழக கடலோர மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டஙகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடியில் 5 செ.மீ. மழை: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 3 செ.மீ, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், ஒய்எம்சிஏ நந்தனம், நாகை மாவட்டம் கோடியக்கரையில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை. , தேனாம்பேட்டை, எம்ஜிஆர் நகர், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தலார ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in