போதைப் பொருள், மதுபான பயன்பாடு குறித்த ஆய்வு ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு

போதைப் பொருள், மதுபான பயன்பாடு குறித்த ஆய்வு ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: போதையின் தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

இதுகுறித்து ஒப்பந்தத்தில் கூறிருப்பதாவது: போதையில்லா தமிழகம் என்பதை எய்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பொறுப்பு துறையாக குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இத்துறையானது மத்திய அரசின் சமூக நீதித்துறையின் நிதியுதவியின் கீழ், தமிழகத்தில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் நிதியை பெறும் வகையில், தமிழக குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையானது, போதை தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாடு குறித்த ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை அறிதல், வாடிக்கையாளர்களால் போதைப்பொருள் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது, போதைப்பொருள் மற்றும் மதுபானம் நுகர்வோரின் சமூக பொருளாதார அடையளம் மற்றும் பின்னணியை அறிதல், மது மற்றும் போதைப்பொருள் நுகர்வு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிதல், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்தல் ஆகியவை இந்த ஆய்வின் நோக்கமாகும்.

இந்த ஆய்வில் கலவையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் வசிக்கும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட போதை மற்றும் மது பயன்படுத்தும் நுகர்வோரிடம் ஆய்வு நடத்தப்பட வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in