

மதுரை: ஐயப்ப சுவாமிக்கு குறித்து அவதூறு பாடல் பாடியதாக சென்னை கானா பாடகி இசைவாணி மீது மதுரை காவல் துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் உள்ளிட்ட அக்கட்சியினர் கானா பாடகி இசைவாணிக்கு எதிராக காவல் ஆணையர் லோகநாதனிடம் இன்று புகார் கொடுத்தனர். அந்த புகாரில், 'இந்து மக்களின் கடவுளாகிய சபரிமலை ஐயப்பனை இழிவாக பாடல்களை பாடிய சினிமா இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் அண்ணாநகர் காவல் நிலையத்திலும் இன்று புகார் அளித்தனர். அந்தப் புகாரில், 'சென்னையைச் சேர்ந்தவர் கானா பாடகி இசைவாணி. இவர், சபரிமலை ஐய்யப்ப சுவாமிக்கு எதிராக வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘ ஐயாம் சாரி ஐயப்பா ’ என தொடங்கும் அப்பாடலில் அனைவருக்கும் அருள் பாலிக்கும், ஐய்யப்ப சாமியை வணங்க வரும் பக்தர்களை அச்சுறுத்துவது போல் கற்பனையை உருவாக்கி, பாடல் வரிகளை இடம் பெறச் செய்து பாடியுள்ளார்.
ஐயப்ப சுவாமிக்கு நடக்கும் சடங்கு முறைகளை உள்நோக்கதுடன் வடிவமைத்து பாடியுள்ளார். தற்போது, கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கின்றனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கானோரும் ஐயப்பனை தரிசிக்க தயாராகும் நேரத்தில் இரு பிரிவு மக்களிடையே பீதியை உருவாக்கும் கெட்ட எண்ணத்துடன் அந்த வீடியோ பாடலை இசைவாணி வெளியிட்டுள்ளார். பக்தர்களின் மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளனர்.