

மதுரை: வீட்டு மனைக்கு பட்டா வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மதுரை முல்லை நகர் பகுதி மக்களுக்கு விஜய் கட்சியினர் ஆதரவளித்து, அவர்களிடம் மனுக்கள் வாங்கினர்.
மதுரை மாநகர் பிபி.குளம் பகுதியிலுள்ள முல்லை நகர், நேதாஜி மெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்புகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, ஆக்கிரமிப்பு அகற்ற நீர்வளத்துறை சார்பில், அப்பகுதியிலுள்ள வீடு, கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்திலுள்ளது.
இந்நிலையில், நீர்வளத்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், நீர்நிலை பகுதியை குடியிருப்பாக வகை மாற்றம் செய்து, பட்டா வழங்கக் கோரி முல்லை நகர் பகுதி மக்கள் கடந்த 8 நாளாக தொடர்ந்து தெருக்களில் குடியேறி போராடுகின்றனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினும் ஆதரவளித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட தலைவர் கல்லாணை தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் முல்லை நகர் பகுதிக்கு நேற்று நேரில் சென்று ஆதரவை தெரிவித்தனர்.போராட்டக்காரர்களுக்கு இனிப்பு, மிச்சர் வழங்கினர். கல்லாணை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இப்பகுதி மக்களின் வீடுகள் குறித்த ஆவணங்கள் மனுக்களை பெற்று தலைவருக்கு கொரியர் மூலம் அனுப்ப உள்ளோம். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகளை செய்வோம். எங்கள் தலைவர் விஜய் கூறுவது போன்று மக்கள் பிரச்சனைக்காக ஆதரவாக இருப்போம்,'' என்றார். முன்னதாக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முல்லை நகர் பகுதி போராட்டக் குழுவினரிடம் செல்போனில் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.