தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

படம்: வி.எம்.மணிநாதன்
படம்: வி.எம்.மணிநாதன்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 முதல் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்குவில் 11 செமீ, ஊத்து பகுதியில் 10 செமீ, கடலூர் மாவட்டம் வனமாதேவி, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு ஆகிய இடங்களில் தலா 9 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கடலூர் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, புதுச்சேரி பாகூர், கடலூர் மாவட்டம் குடிதாங்கி, பண்ருட்டி, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in