“தமிழக அரசில் ஒருதுறைகூட திறமையானதாக இல்லை” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
Updated on
1 min read

புதுக்கோட்டை: “தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (நவ.17) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள்கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்தகால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளைில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in