

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளை 20 நிமிடத்தில் பெறலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சட்டப்பேரவையில் திங்கள் கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை 7 லட்சத்து 60 ஆயிரம் பயனாளிகள் ரூ.1,620.17 கோடி செலவில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான அட்டைகள், ஆட்சியர் அலுவலகங்களில் 20 நிமிடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை போன்ற பெரிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 20 நிமிடங்களில் காப்பீட்டுத் திட்ட அட்டையைப் பெறலாம்.
இத்திட்டத்தில் கடந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் ஈட்டிய தொகை ரூ.12.5 கோடி. ஆனால், இரண்டே ஆண்டுகளில் இந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் ஈட்டிய தொகையோ ரூ.573.2 கோடி. இப்போது அரசு மருத்துவமனைகளுக்கு வந்துள்ள 573 கோடி அப்போது எங்கே சென்றது?
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
என்ன ஆவணம் தேவை ?
இருபது நிமிடங்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டும்.