

புதுச்சேரி: அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் என்று மாநில மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (நவ.14) செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. ஒருசில இடங்களில் தவிர்க்கமுடியாத நிகழ்வுகள் நடந்திருப்பதை வைத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறுவது சரியல்ல.
எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக புதுச்சேரி அரசின் மீது தவறான எண்ணத்தை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் குற்றஞ்சாட்டி வருகின்றன. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு எப்படியெல்லாம் சீர்கெட்டிருந்தது என்பது நன்றாகவே தெரியும்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பக்கத்து மாநிலமான தமிழகத்தில் அது எப்படிப்பட்ட நிகழ்வாக சென்று கொண்டிருக்கிறது என்பது இங்குள்ளவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே எங்கோ ஒரு அசம்பாவித சம்பவம் நடப்பதை வைத்து புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசுவது புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதனை மக்களும் ஏற்கமாட்டார்கள்.
காவல்துறையானது உரிய நேரங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையாக நடந்தால், மனித உரிமை மீறலாகிவிடும் என்கிற நிலையும் உள்ளது. தொடர் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உள்ளது. அவருக்கு காவல்துறை சார்பில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே காவல்துறை செயல்படுகிறது.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழும் போது அவர்கள் மீது குண்டர் சட்டம் போட முடியாது. தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடலாம். எனவே குண்டர் சட்டம் போடுவது சம்மந்தமான உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுப்பார். மருத்துவக் கல்வியில் என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் போலி ஆவணம் மூலம் சேர்ந்தவர்கள் குறித்து சென்டாக் அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து விளக்கம் வந்தவுடன் அது குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.