

சென்னை: மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகளாக வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் (25). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரேமா வலியால் துடித்து அவதிப்பட்டுள்ளார். இதை பார்த்து வேதனை அடைந்த அவரது மகன் விக்னேஷ், புதன்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.
அங்கு அறையின் கதவை மூடிவிட்டு, "எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை" எனக்கேட்டு விக்னேஷ் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி) எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று (நவ.14) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. அதன்படி, திருச்சி, கோவை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், பயிறசி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரித்தல், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பாக திரண்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கிண்டியில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, வேலைநிறுத்தம் காரணமாக, புறநோயாளிகளுக்கான சிகிச்சைகள் ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டதால், நோயாளிகள் கூட்டம் குவிந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் சுகந்தி ராஜகுமாரி புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
உதகை: சென்னையில் அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.மேலும் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் தினேஷ் மற்றும் இந்திய அவர்கள் சங்க செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி பாதுகாப்பு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 2 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவைத் தவிர மற்ற பிரிவு பணிகளை புறக்கணித்தனர். இதேபோல் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புதன்கிழமை மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்துவிட்டு இந்திய மருத்துவர்கள் சங்கக்தின் காஞ்சிபுரம் கிளை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவர் சு.மனோகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருத்துவமனைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.