

மதுரை: “அதிமுகவினர் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும்” மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (நவ.11) காலை புகார் மனு ஒன்றை அளித்தார்.
மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினேஷ்குமார் புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில், தாக்குதலில் ஈடுபட்ட அமமுக நிர்வாகி பழனிசாமி உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (நவ.11) காலை புகார் மனு ஒன்றை அளித்தார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவுக்கு வந்த சோதனைகளைத் தாண்டி அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி பாதுகாத்து வருகிறார். ஜெயலலிதாவின் மறுஉருவமாக அவர் செயல்பட்டு வருகிறார். அவரின் கட்டளையை ஆண்டவன் கட்டளை நினைத்து அதிமுகவினர் பணியாற்றி வருகிறார்கள். மதுரையில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட அன்றைய தினம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற அமமுக டி.டி.வி.தினகரனின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சமீப காலமாக அதிமுகவினர் மீது தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் அதிமுகவினர் மீது ரத்தம் சொட்டச் சொட்ட தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஒரு உதயகுமார் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு லட்சம் உதயகுமார் உருவாகி அதிமுகவை வழி நடத்துவார்கள். அதிமுகவினரின் நாக்கை வெட்டுவோம் என சொன்னவர்கள் இன்று நாட்டிலேயே இல்லாமல் போய் உள்ளார்கள்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நான் உட்பட அதிமுக நிர்வாகிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும், உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் தான் பொறுப்பு. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அமமுக, ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல், உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. டி.டி.வி.தினகரன் தூண்டுதலால் ஆயுதங்களுடன் வந்த அமமுகவினர் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம்.” இவ்வாறு கூறினார்.