முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்கக் கோரி புதிய வழக்கு

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்கக் கோரி புதிய வழக்கு
Updated on
1 min read

சென்னை: அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அணிய வேண்டிய உடை தொடர்பாக ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. பிரவீண் சமாதானம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் கொடி, சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது. கட்சி பாகுபாடின்றி நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய துணை முதல்வர் கட்சி சின்னத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினால் அது திமுகவின் சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதன்மூலம் அவர் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறார்.

அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்பற்றாதது சட்டவிரோதமானது. எனவே, அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-சர்ட் அணிய தடை விதிக்க வேண்டும். அத்துடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாடு தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கெனவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-சர்ட் அணிவதை எதிர்த்தும், கலாசார ரீதியிலான உடை அணிய வலியுறுத்தியும் சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யகுமார் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in