

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 6,792 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 9-வது நாளாக 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும், கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2,324 கனஅடியாக இருந்தது. அது இன்று (அக்.24) காலை 6 மணியளவில் 3,438 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாவட்டத்தில் பெய்த கனமழையால், இன்று காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.45 அடியாக உள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு 6,792 கனஅடி தண்ணீர், 3 பிரதான மதகுகள் மற்றும் 3 மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், அணை தரைப்பாலத்தை மூழ்கியடியத்தபடி செல்கிறது. அணையின் பிரதான நுழைவுவாயில் இரு பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அணை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், அணை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல், அகரம், இருமத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்புடைய ஊராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வரை 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 9-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறும்போது, “நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும், கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணைக்கு இன்று இரவு மேலும், அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என கிராம பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.