கனமழையால் நிலங்களில் மூழ்கிய காய்கறிகள் - உதகை விவசாயிகள் கவலை

கனமழையால் நிலங்களில் மூழ்கிய காய்கறிகள் - உதகை விவசாயிகள் கவலை
Updated on
1 min read

உதகை: உதகை அருகே எம்.பாலாடா சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழைக்கு பல ஏக்கர் மலை காய்கறி தோட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. மழையால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கனமழை பெய்தது. உதகை அருகே எம்.பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை ஹாடா பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

கன மழைக்கு நீரோடை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மழை நீர் மலை காய்கறி தோட்டங்களை சூழ்ந்தது. அப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் நீரில் மூழ்கின.

விவசாயிகள் கூறும்போது, ‘எம்.பாலாடா சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் நீரில் மூழ்கின. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 37 மில்லி பதிவானது. அலலாஞ்சியில் 21, கிண்ணக்கொரை 17, கூடலூர் 14 மி.மீ., மழை பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in