திராவிடம் எனும் வார்த்தை பலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் @ மதுரை

திராவிடம் எனும் வார்த்தை பலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் @ மதுரை

Published on

மதுரை: இன்றைக்கு திராவிடம், திராவிடர் எனும் வார்த்தைகள் பலருக்கு ஒவ்வாமையாகவே இருக்கிறது என, மதுரையில் நடந்த நூல் வெளியிட்டு விழா ஒன்றில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

மதுரையிலுள்ள பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில், தொல்லியல் அறிஞர் பொ. ராசேந்திரனின் நினைவு மலரான ‘ராசேந்திரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரை அழகர் கோவில் சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று மாலை நடந்தது. தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, “சிந்து சமவெளி நாகரிகமும், திராவிட நாகரிகமும் ஒன்று தான் என்பதை நிரூபிக்க தமிழ்நாடு அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய அளவில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆய்வு. இன்றைய சூழலில் திராவிடம், திராவிடர் எனும் வார்த்தைகள் பலருக்கு ஒவ்வாமையாகவே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் வரும் வார்த்தைகளுக்கும், அகழாய்வுகளுக்கும் தொடர்புகள் உள்ளன. அகழாய்வுகள் உண்மையான தரவுகளை வெளிக்கொண்டு வரவேண்டும், உண்மையான வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் செயலர் சாந்தலிங்கம், பொருளாளர் ராசகோபால், தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குநர் பூங்குன்றன், ஆய்வாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in