புதுச்சேரி | ரூ.106 கோடி சொத்து சேர்த்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி | ரூ.106 கோடி சொத்து சேர்த்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என நாராயணசாமி கேள்வி
Updated on
2 min read

புதுச்சேரி: "புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரியும் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ, வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந் நிலையில், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் ரவிக்குமார் என்பவருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அதுபற்றி அவர் கூறியதாவது: ''வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக ரவிக்குமார் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டை சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அதனைத் தொடர்ந்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில், ரவிக்குமார், அவரது மனைவி பிரியதர்ஷினி, அவரது மாமியார் குமுதம் ஆகியோர் பெயர்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவர் மீதும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் ரவிக்குமார் வாங்கிய சொத்துகள், ஆறு பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 106 கோடி. பல்வேறு வீடுகள், நிலங்கள் ஆகியவை இதில் அடங்கும். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக ஆப்ரேட்டர் ரவிக்குமார் வீட்டை இரு முறை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். தற்போது சிபிஐ இவ்விஷயத்தில் சோதனை செய்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இவரிடம் கண்டறியாத பல கோடி சொத்துகள் உள்ளன.

சுமார் ரூ. 60 ஆயிரம் சம்பளம் வங்கும் ரவிக்குமார், ரூ.106 கோடிக்கு சொத்தை வருமானத்துக்கு அதிகமாக வாங்கியுள்ளார். சொத்துகளை கடந்த 2009ல் இருந்து வாங்கியுள்ளார். இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது? பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? யார் பினாமியாக இவர் உள்ளார் என்பதை சிபிஐ தீவிரமாக விசாரிக்கவேண்டும். ரவிக்குமாரை சிபிஐ வழக்கில் இருந்து காப்பாற்ற, ஒரு அமைச்சர் சென்னையில் தங்கியுள்ளார். சிபிஐ ஆதாரம் சேகரிக்காமல் வழக்கு தாக்கல் செய்யமாட்டார்கள்.

இந்த கோடிக்கணக்கான சொத்து யாருடைய பணம் என்பதை சிபிஐ விசாரிக்கவேண்டும். இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்க வேண்டும். தமிழக பகுதியிலும் இவர் சொத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு தாக்கல் செய்து பாரபட்சமின்றி சிபிஐ செயல்படவேண்டும். அரசியல் அழுத்தத்துக்கு சிபிஐ பலிகடா ஆகிவிடக்கூடாது. நடுநிலையுடன் செயல்படவேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது கைது செய்யப்படவேண்டும்.

வழக்குப்பதிவு செய்தும் அரசு ஊழியர் ரவிக்குமார் மீது எவ்வித நடவடிக்கையும் புதுச்சேரி அரசு எடுக்கவில்லை. பணியாளர் துறையின் தலைவரான முதல்வர் ரங்கசாமி மவுனம் காக்கிறார். ரவிக்குமாரை காப்பாற்ற நினைக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அரசு ஊழியர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவானால், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டும். துறை ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும். புதுச்சேரி அரசு பணியாளர் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி இவ்விஷயத்தில் விளக்கம் தர வேண்டும். ரவிக்குமாரை சிபிஐ ஏன் இன்னும் கைது செய்யவில்லை என விளக்கம் தரவேண்டும்" என்று தெரிவித்தார். பேட்டியின் போது காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in