கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு அக்.21-க்கு ஒத்திவைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு வரும் 17-ம் தேதி தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு 21-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில், இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர் வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் கிருஷ்ணவேணி கூறுகையில், “சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், சென்னையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு வரும் 17-ம் தேதி தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் வரும் 21-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரதுறை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in