

மதுரை: மதுரை கர்டர் பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி காரில் தவித்த நபர்களை மீட்ட காவலர் மற்றும் 2 இளைஞர்களை தமிழக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பாராட்டினார்.
மதுரை நகரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில், காவல் ஆணையரின் உத்தரவில் பேரில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். திலகர்திடல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கர்டர் பாலம் அடியில் மழை நீர் அதிகமாக தேங்கிய நிலையில், போலீஸார் ஒலி பெருக்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனாலும், போலீஸாரின் எச்சரிக்கை பொருட்படுத்தாமல் கோச்சடை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் தனது காரில் கர்டர் பாலத்தை கடக்க முயன்றபோது, வெள்ள நீரில் சிக்கினர். இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காவலர் தங்கமுத்து மற்றும் மணிநகரத்தை சேர்ந்த கார்த்திக், சந்திசேகர் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு நீரில் சிக்கிய காருக்குள் தவித்த கோபி, அவருடன் பயணித்த ரமேஷ் ஆகியோர் கயிறு மூலம் பத்திரமாக உயிருடன் மீட்டனர். காரும் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது.
இந்நிலையில், தற்செயலாக மதுரை வந்திருந்த தமிழக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சரியான நேரத்தில் வேகமாக செயல்பட்டு கர்டர் பாலத்திற்கு கீழ் மழை நீரில் மூழ்கி காருக்குள் சிக்கிய கோபி, ரமேஷ் ஆகியோரை காப்பாற்றிய செயலுக்கென காவலர் தங்கமுத்து, கார்த்திக், சந்திரசேகர் ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.