வெற்றிலை, பாக்கு வைத்து மதுரை மக்களை மாநாட்டுக்கு அழைத்த விஜய்யின் தவெக கட்சியினர்!

வெற்றிலை, பாக்கு வைத்து மதுரை மக்களை மாநாட்டுக்கு அழைத்த விஜய்யின் தவெக கட்சியினர்!
Updated on
1 min read

மதுரை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கும் தவெக கட்சி மாநாட்டுக்கு தொண்டர்கள், பொது மக்களை வரவேற்கும் விதமாக மதுரையில் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து மக்களை அழைத்தனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடக்கிறது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்கு வைத்து நடக்கும் இந்த மாநாடு பிற அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், அரசியல் நாடி துடிப்பின் களமான மதுரையில், மதுரை மாநகர தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தவெக மாநாடுக்கு தொண்டர்கள், பொது மக்களை வரவேற்று வித்தியாசமான அழைப்பிதழ்களை துண்டு பிரசுரமாக அக்கட்சியினர் வழங்குகின்றனர்.

அந்த அழைப்பிதழில், ‘வாரீர்!! நம்பி வாங்க, நல்லாட்சி தரப்போறோம் நாங்க, விடியல் நாடகம் போதுங்க, விட்ற மாட்டோம் நாங்க, அம்மா - அப்பா சிந்தியுங்கள், வாரிசு அரசியல் செய்யமாட்டோம் நாங்க, அக்கா - அண்ணா எங்க பக்கம், அடுத்த தலைமுறைக்கு வரப்போகுது, வெளிச்சம் தரப்போறம் நாங்க, மதவாதம் இல்லா தமிழகம், மானமிகு தளபதியால் வரப்போவது நிச்சயம், 50 ஆண்டு திராவிட அரசியல் போதும், திராணியுள்ள தமிழன் வர்றார், வாய்ப்பு தாருங்கள், தன்மான தமிழகம் அமைய தயங்காமல், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தாரீர்… வெற்றி நிச்சயம்’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு விடியல் வேண்டியும் , விக்கிரவாண்டி முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டியும் மதுரை பாண்டி கோயில் சிறப்பு வேண்டுதலில் விஜய் கட்சியினர் ஈடுபட்டனர். அப்போது, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அழைப்பிதழுடன் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்தும் மாநாடுக்கு அழைப்பு விடுத்தனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினருக்கும் அழைப்பிதழ் கொடுத்தனர். மதுரையில் விஜய் கட்சியினரின் இந்த அழைப்பை மக்கள் வித்தியாசமாக பார்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in