Published : 02 Oct 2024 05:51 AM
Last Updated : 02 Oct 2024 05:51 AM

காந்தி மண்டபத்தில் தூய்மை பணி செய்த ஆளுநர்: மதுபாட்டில்கள் கிடந்ததால் வேதனை

சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்திசிலையை கழுவி சுத்தம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த வளாகத்தில் மதுபாட்டிகள் கிடப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் தூய்மை சேவை பிரச்சாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்த ஆளுநர்ஆர்.என்.ரவி, வளாகத்தில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.என்.ரவி கூறியதாவது: மகாத்மா காந்தி தூய்மையையும் வலியுறுத்தியவர். தூய்மை என்பது தெய்வீகமானது. அதனை தினசரி பழக்கமாக நாம் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நம் நாட்டில் பொது இடங்களில் குப்பை கொட்டும்போக்கு உள்ளது. இது நாகரீக சமுதாயத்துக்கு நல்லதல்ல. பொது இடங்களில் தூய்மையின்மை என்பதுபல நோய்களை உருவாக்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான்.

காந்தி மண்டபத்தில் கூட குப்பை குவிந்து கிடக்கிறது.குறிப்பாக ஆங்காங்கே மதுபாட்டிகள் போன்றவையும் கிடக்கின்றன. இது மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை பார்க்குபோது மிகவும் வருத்தமாகஉள்ளது. எனவே பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது. அது அனைவருக்குமானது. அதேபோல பல்கலைக்கழகங்களில் குறைந்தது மாதத்துக்கு ஒருமுறையாவது தங்களது வளாகங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x