“இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்” - அதிமுக ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
Updated on
2 min read

சென்னை: “தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை நாம் இழந்துவிட்டோம். அதனை மீட்டுவிட்டாலே வெற்றி உறுதி” என்று சென்னையில் இன்று (அக்.1) நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று (அக்.1) நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: தற்போதைய அரசியல் களம் தகவல் தொழில்நுட்பத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. இந்திய அரசியலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவை முதலில் தொடங்கியது அதிமுக தான். அதிமுகவுக்கு எதிராக சில ஊடகங்களும் பத்திரிகைகளும் திட்டமிட்டு பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. அவற்றை அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தான் முறியடிக்க வேண்டும்.

அதிமுக மீதான அவதூறுகளை களையச் செய்யும் வலிமை தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உள்ளது. அதிமுக ஆட்சியில், கடுமையான வறட்சி இருந்தபோதும், பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் முதல் மின்சாரம் வரை அனைத்தும் முறையாக வழங்கப்பட்டது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பப் பிரிவு வலுவாகவும் உத்வேகத்துடனும் செயல்பட வேண்டும். முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மிக வலுவாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை செல்போன்கள் மூலம் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். தமிழகத்தில் 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் வாக்குகள் முழுவதையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.பொய் செய்திகள் மூலம் இளைஞர்களை ஏமாற்றும் தந்திரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. அதை நாம் முறியடித்தாக வேண்டும். கடந்த தேர்தலில் இழந்த 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலே நாம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in