

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக கோடநாட்டில் 80 மிமீ மழை பதிவானது.மேலும், கடும் மேகமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமான லேம்ஸ்ராக் டால்பின்னோஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் ராட்சத மரம் ஒன்று உடைந்து சாலையில் விழுந்தது,இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதன் பெயரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர்.மேலும் மழையின் காரணமாக பந்துமை, பிளாக் பிரிட்ஜ் பகுதிகளில் மரங்கள் விழுந்து மின்தடையும் ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழையளவு; உதகை 11, நடுவட்டம் 2, கிளன்மார்கன் 11, மசினகுடி 16, குந்தா 12, அவலாஞ்சி 20, எமரால்டு 13, கெத்தை 16, கிண்ணக்கொரை 12, அப்பர் பவானி 5, குன்னூர் 37, பர்லியாறு 5, கோத்தகிரி 25, கீழ் கோத்தகிரி 37, கூடலூர் 3 மி.மீ மழை பதிவானது.