நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
Updated on
1 min read

தேனி: மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இரவு 11 மணி வரை இம்மழை நீடித்தது. பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் இந்நிலை நீடித்தது.

இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 184 கனஅடியாக அதிகரித்தது. ஏற்கெனவே அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடி அளவிற்கு நீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் நீர்வரத்தும் அதிகரித்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in