

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து 3 மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில், மம்சாபுரம் சாலையை விரிவுபடுத்தி கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் 40 பயணிகளுடன் சென்ற மினி பேருந்து சாலையின் வளைவில் திரும்பிய போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் நிதிஷ் குமார்(17), வாசுராஜ் (15), கல்லூரி மாணவர் சதீஷ் குமார் (20), தனியார் கல்லூரி ஊழியர் மாடசாமி (28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனிடையே, குறுகலான அந்தச் சாலையில் அதிக பயணிகளுடன் பேருந்து வேகமாக சென்றதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் நிதிஷ் என்பவரை மம்சாபுரம் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதையடுத்து மம்சாபுரம் - ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையை (பழைய மதுரை சாலை) சீரமைத்து அகலப்படுத்த வேண்டும். மம்சாபுரத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி நகரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.