தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

வெப்பம்
வெப்பம்
Updated on
1 min read

சென்னை: தமிழத்தில் இன்றும், நாளையும் 5 டிகிரி ஃப்ரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 3 செமீ, அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம், செந்துரை கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோலையார், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in