Published : 12 Sep 2024 06:18 AM
Last Updated : 12 Sep 2024 06:18 AM
பரமக்குடி: இமானுவேல் சேகரனின் 67-வதுநினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பு தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.
இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி தலைமையில், அவரது பேரன்கள் ரமேஷ்குமார், கோமகன், சக்கரவர்த்தி, சந்திரசேகர், பேத்தி ரூபா மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, செல்லூர் கிராம மக்கள் சார்பில் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரி மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், பி.மூர்த்தி, கயல்விழி, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இமானுவேல் சேகரன் குறித்து அவரது பேரன் செல்ஷியா ரமேஷ்குமார் எழுதிய ‘டைம்லெஸ் டேப்பஸ்ட்ரி’ என்ற ஆங்கில நூலை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார். அதிமுக சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தர்மர் எம்.பி., பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், விஜயகாந்த் மகன்விஜயபிரபாகரன் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில், கட்சியின் தேசிய செயலாளர் விஸ்வநாதன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் மதிமுக சார்பில் எம்எல்ஏ-க்கள் சதன் திருமலைக்குமார், பூமிநாதன்,தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மலர்விழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியையொட்டி 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு வழங்கவில்லை... தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, "இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. கட்சித் தலைவர்களை ஆங்காங்கே நிறுத்திவைத்ததை ஏற்கமுடியாது" என்றார். இதற்கிடையில், காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, பரமக்குடி ரயில்வே கேட் அருகே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இரு தரப்பினரிடையே மோதல்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷ்யாம் ஆகியோர் மாலை 5.15மணிக்கு மரியாதை செலுத்த வந்தனர். அப்போது, கிருஷ்ணசாமியுடன் வந்திருந்த கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரை அனுமதிக்கவில்லை. அதை மீறி அவர் நினைவிடத்தின் மேலே ஏறியபோது, தேவேந்திர குல பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை கீழே தள்ளினார்களாம். இதையடுத்து, கிருஷ்ணசாமி ஆதரவாளர்களுக்கும், தேவேந்திரகுல பண்பாட்டுக் கழகத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் நாற்காலிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT