இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி | படம்: எல்.பாலச்சந்தர்
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி | படம்: எல்.பாலச்சந்தர்
Updated on
1 min read

பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 67-வது நினைவு தினம் இன்று (செப்.11)அனுசரிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், நவாஸ்கனி எம்பி, முன்னாள் எம்பி பவானிராஜேந்திரன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி, முத்துராஜா, கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து இமானுவேல் சேகரன் குறித்து அவரது பேரன் செல்ஷியா ரமேஷ்குமார் எழுதிய ‘டைம்லெஸ் டேப்பஸ்ட்ரி’ என்ற ஆங்கில புத்தகத்தை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார். முன்னதாக, அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்களை, இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் அவரது பேரன், பேத்திகள் வரவேற்று, மணி மண்டபம் கட்டுவதற்கும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.

ஸ்டாலின் புகழஞ்சலி: இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தீண்டாமையை ஒழிக்கவும் – சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவு நாள் இன்று. நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் – சமூகநல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in