“தவெக மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை?” - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: “விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சினை? ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது,” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தவமணி இல்ல திருமண விழாவில் இன்று (செப்.5) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அமெரிக்காவில் முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். இப்படி சுற்றுலா பயணமாக இல்லாமல் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கெனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பது தெரியவில்லை.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும். அதற்கு மாற்றாக தமிழகத்திலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும்.

பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்கள் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.

விஜய்யின் ‘தி கோட்’ படத்துக்கு வாழ்த்துக்கள். அவரது கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.

ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. இப்படி பல ஊழல்கள் நடப்பதும் உண்மை இதையெல்லாம் பார்க்க வேண்டிய அரசாங்கம் தவறிவிட்டது. முதல்வர் தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் பல கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்தப் பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம்.” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in