

இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6,121 கோடியில் 12,087 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3,673 பேருந்துகளை புதுப்பித்து இயக்க ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.288 கோடியில் 380 பசுமை மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நகரங்களை ஒட்டிய ஊரக பகுதிகளிலும் போக்குவரத்து சேவையை வழங்க சிற்றுந்து திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு 1,603 புதிய வழித்தடங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதிநிலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ரூ.2ஆயிரம் கோடியில் ஊக்க நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.4ஆயிரம் கோடியும், மாணவர்கள் பேருந்துப் பயண கட்டணம் திட்டத்துக்கு ரூ.1,782 கோடியும், டீசல் மானியத்துக்கு ரூ.1,857 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை: நடப்பாண்டில் 253கி.மீ. சாலைகள் ரூ.1,647 கோடியில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்த பணிகள் நடக்கிறது. 1,168 தரைப்பாலங்கள் ரூ.2,064 கோடியில் உயர்மட்ட பாலமாக கட்டப்பட்டுள்ளன. மேலும் ரூ.1,342 கோடியில் 42 உயர்மட்ட பாலங்களும், ரூ.2,184 கோடியில் 46 ரயில்வே மேம்பாலங்களும், ரூ.2,388 கோடியில் 30 புறவழிச்சாலை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 5,281 உட்கட்டமைப்புப் பணிகள் ரூ.482 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 120 கிராம அறிவுசார் மையங்கள் ரூ.117 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. தொல்குடி திட்டத்தின்கீழ், 908 அடிப்படை உட்கட்டமைப்புப் பணிகள் மற்றும் 6,685 பழங்குடியினர் வீடுகளின் கட்டுமானப் பணிகள் ரூ.450 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ.420 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.460 கோடி, மாணவர் விடுதிகளின் அடிப்படை வசதிகளுக்கு ரூ.78 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ரூ.1,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் துணிநூல் துறைகைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கி வரும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3,021 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.