Published : 19 Aug 2024 04:37 AM
Last Updated : 19 Aug 2024 04:37 AM
சென்னை: போதிய மூலதனம் இல்லாததால் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க முடியாதநிலை இருப்பதாக போக்குவரத்து துறையின் ஓய்வூதிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வுபெற்ற 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வந்தது. அவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால் மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாக ஓய்வூதியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. அம்மனுவானது, போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி என்னும் அறக்கட்டளையிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டது.
இதற்கு அறக்கட்டளை தெரிவித்த விளக்கம்: தற்போது போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதிய தொகை, அரசிடமிருந்து போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட டீசல் மானியம், மாணவர் பயணக் கட்டண மானியம், மகளிர் பயணக் கட்டண மானியத் தொகையில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
நிதி பொறுப்பாட்சியில் போதிய மூலதனம் இல்லாத காரணத்தால் அகவிலைப்படி உயர்வு மற்றும் இதர பலன்கள் வழங்க இயலாத நிலை உள்ளது. மேலும், அகவிலைப்படி உயர்வு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT