Published : 17 Aug 2024 04:20 AM
Last Updated : 17 Aug 2024 04:20 AM

அதிகரிக்கும் நில அபகரிப்பு, கொலை சம்பவங்கள்: இனியும் மவுனம் காக்க முடியாது என நீதிபதி கருத்து: வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு

சென்னை: சமீப காலமாக தமிழகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸாரின் துணையுடன் நடைபெறும் நில அபகரிப்பு வன்முறைகள், கொலைச் சம்பவங்களால் நீதிமன்றம் இனிமேலும் மவுனம் காக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, நில அபகரிப்பு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த டி. கார்த்திக்என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சோழிங்கநல்லூரில் கிழக்கு கடற்கரைசாலையை ஒட்டிய பகுதியில் எனக்கு சொந்தமான 18.25 சென்ட் நிலத்தின் சட்டப்பூர்வமான உரிமை தொடர்பான வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 14-ம்தேதி கோபாலகிருஷ்ணன் என்பவர் நீலாங்கரை காவல் ஆய்வாளரின் துணையுடன் சட்டவிரோதமாக எனது நிலத்தை அபகரித்து, அங்கிருந்த கட்டிடங்களையும் இடித்தார்.

இதை தடுக்க முற்பட்டபோது ரவுடிகள் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே எனதுநிலத்துக்கும், எனக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கி, என்னுடைய நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோரும், அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.உதயக்குமார், கோபால கிருஷ்ணன் தரப்பில் வழக்கறிஞர் பி.கே.கணேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரரின் நிலத்தின் உரிமைதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலத்தை கோபாலகிருஷ்ணன் அபகரிக்க முற்படுவதாக மனுதாரர் ஏற்கெனவே நீலாங்கரை போலீஸில் புகார் அளித்துள்ளார். கடந்த மேமாதம் இந்த நிலத்துக்குள் அத்துமீறிநுழைந்து கட்டிடங்களை கோபாலகிருஷ்ணன் இடித்துள்ளார்.

அதை போலீஸார் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இது தொடர்பாக நீலாங்கரை காவல்ஆய்வாளருக்கு எதிராக உதவி ஆணையரிடம் மனுதாரர் புகார் அளித்துள்ளார். ஆனால் உதவி ஆணையரோ, காவல் ஆய்வாளருக்கு சாதகமாக அறிக்கை அளித்துள்ளார். காவல் துறையினர், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நில மாபியாக்கள் இதுபோல சட்டவிரோதமாக நிலங்களை அபகரித்து வருவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற நில அபகரிப்பு வழக்குகள் தினந்தோறும் உயர் நீதிமன்றத்துக்கு வருகின்்றன. அந்த நிலம்தங்களுக்கு சொந்தமானது என கோபாலகிருஷ்ணன் தரப்பில் வாதிட்டாலும், உரிமை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்தநிலத்துக்குள் போலீஸாரின் துணையுடன் அத்துமீறி நுழைந்து கட்டிடங்களை இடித்ததைப் பார்க்கும்போது நிலஅபகரிப்பு நடந்திருப்பதாகவே உணர முடிகிறது.

இதுபோன்ற வழக்குகளில் போலீஸார் உண்மைத்தன்மையுடன், நேர்மையாக, வெளிப்படையாக விசாரணைமேற்கொள்ளாமல் நில அபகரிப்பாளர்களுக்கு ஆதரவாக சிவில் பிரச்சினை எனக்கூறி தட்டிக்கழிப்பது வேதனைக்குரியது. இந்த நிலை தொடர்ந்தால் அப்பாவி பொதுமக்கள், காவல்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலைந்து விடும். மாறாக நில மாபியாக்கள், ரவுடிகளை காவல்துறையே ஊக்குவிப்பது போலாகிவிடும்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இனிமேலும் மவுனம் காக்க முடியாது. சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான வன்முறை சம்பவங்கள், கொலைகள் உள்ளிட்ட வழக்குகளை போலீஸார் எவ்வாறு விசாரிக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை சென்னையில் உள்ள சிபிஐ தென் பிராந்திய இணை இயக்குநர் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x