குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில், மத்திய, மாநில அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில், மத்திய, மாநில அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழந்ததாக புகார்: காவேரிப்பட்டணம் அருகே தனியார் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

Published on

கிருஷ்ணகிரி: குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில், மத்திய, மாநில அலுவலர்கள் குழு ஆய்வு நடத்தி பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களின் 6 வயது மகள் காவியா ஸ்ரீ. கடந்த 11-ம் தேதி காவியா ஸ்ரீ வீட்டின் அருகில் உள்ள பெட்டிக் கடையில் ரூ.10-க்கு குளிர்பான பாட்டில் ஒன்றை வாங்கிக் குடித்தார். குடித்த சிறிது நேரத்தில் மூச்சு திணறி மயக்கமடைந்த அந்தச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குளிர்பான ஆலையில் ஆய்வு நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, தொடர்புடைய குளிர்பான நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டியில் உள்ள அலுவலகத்துக்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் டாக்டர் பரணிராஜன், சிவபாக்கியம், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன், அலுவலர்கள் ராஜசேகர், ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட குளிர்பானங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இது குறித்து அலுவலர்கள் கூறுகையில்,"ஆய்வின் முடிவில் தவறுகள் நடந்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அலுவலகர்கள் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in