புதுச்சேரியில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ரேஷனில் இலவச அரிசி: அமைச்சர் அறிவிப்பு 

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ரேஷனில் இலவசமாக அரிசி வழங்கப்படும். ரேஷன் கார்டு வழங்குவதில் உள்ள தவறுகள் சரிசெய்யப்படும். எளிமையான முறையில் ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் திருமுருகன் தெரிவித்தார்.

இன்று புதுச்சேரி பேரவையில், பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் திருமுருகன் பேசியது: ''புதுச்சேரி மாநில மக்களுக்கு பயன் தர ரேஷனில் அரிசி தரும் திட்டம் செயல்படுத்தப்படும். சில காரணங்களால் கடந்த ஆட்சியில் அரிசி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இனி ரேஷனில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் இலவசமாக அரிசி வழங்கப்படும். அத்துடன் பொது விநியோகத் திட்டத்தில் மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவையும் விநியோகிக்கப்படும்.

ரேஷன் கார்டுகள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆள் பற்றாக்குறையால் தவறுகள் நடக்கவாய்ப்புள்ளது. புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே அலுவலகம் மட்டும்தான் உள்ளது. காலதாமதம் ஏற்படுவதால் இடைத்தரகர்களும் உருவாகுகின்றனர். இது விரைவில் சரி செய்யப்படும். ரேஷன் கார்டு வழங்குவதை எளிமைப்படுத்தும் திட்டமும் உள்ளது. ரேஷன் கார்டு எளிமையான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், சரண்டர், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், ஆதார் பதிவு, பயனாளி மாற்றம், நகல் அட்டை வழங்கல் ஆகிய பணிகளை பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். முக்கியமாக, சிவப்பு ரேஷன் கார்டுகள் முறையாக ஆய்வு செய்து வழங்கப்படும். அதிலுள்ள குளறுபடிகள் சரி செய்வோம். தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் சரிசெய்வோம். முன்பு எம்எல்ஏ-க்களுக்கு தெரியாமல் ரேஷன் கார்டு கிடைத்தது. இனி அவ்வாறு நடக்காது'' என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in