வழக்கறிஞரை தாக்கிய டிஎஸ்பி மீது தாமதமாக வழக்குப் பதிவு: ஐகோர்ட் கடும் அதிருப்தி

வழக்கறிஞரை தாக்கிய டிஎஸ்பி மீது தாமதமாக வழக்குப் பதிவு: ஐகோர்ட் கடும் அதிருப்தி
Updated on
1 min read

மதுரை: வழக்கறிஞரை தாக்கிய டிஎஸ்பி மீது தாமதமாக வழக்கு பதிவு செய்ததற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமாரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘என்னை மேலூர் காவல் நிலையம் அருகே டிஎஸ்பி தாக்கினார். இது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேலூர் நீதித்துறை நடுவர் எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் டிஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தென்மண்டல ஐஜி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலதாமதமின்றி உடனடியாக வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிய காலதாமதம் செய்த மேலூர் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் காவல் நிலைய அலுவலராக செயல்பட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் துறையினர் மீது நம்பிக்கை வைத்து குறைகளை தெரிவித்தால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என சாதாரண பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மனுதாரரை டிஎஸ்பி காவல் நிலையம் முன்பு தாக்கியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உத்தரவு பெற்றுள்ளார். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யாததால், உயர் நீதிமன்றம் வந்துள்ளார். இங்கு வழக்கு தாக்கலாகி 6 மாதங்களுக்கு மேலாகிறது.

காவல் துறை தரப்பில் பதில் மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் காவல் துறை அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டால் தங்களுக்கு நீதி கிடைக்காது எனும் எண்ணத்தை உருவாக்கும். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுத்து, காவல் துறையின் கவுரவத்தை பாதுகாத்ததற்காக தென் மண்டல காவல்துறை தலைவருக்கு நீதிமன்றம் மீண்டும் பாராட்டுகளை தெரிவிக்கிறது. மனு முடிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in