Published : 22 Jul 2024 06:10 AM
Last Updated : 22 Jul 2024 06:10 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சம்போ செந்திலை பிடிக்க போலீஸார் தீவிரம்: தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக தகவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்போ செந்திலை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அவர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் செல்போன்களை வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஹரிதரன் கைதாவதற்கு முன்பு அந்த செல்போன்களை வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில்வீசியுள்ளார். அந்த செல்போன்களின் சில பாகங்களை தீயணைப்புதுறை, ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் போலீஸார் கைப்பற்றினர்.

இதையடுத்து, அவரை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் மீட்கப்பட்ட செல்போன்களை, மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, மற்ற செல்போன்களின் பாகங்களையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரிதரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருவள்ளூரை சேர்ந்த தேமுதிக நிர்வாகி உள்பட 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர்.

ரவுடி சீசிங் ராஜா: பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கும் நிலையில், அதில் முக்கிய நபராக கருதப்படும் பல்லாவரத்தை சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பழி தீர்க்க திட்டம்: ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்தவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் பதுங்கி இருக்கும், அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் மற்றொரு பிரபல ரவுடியான சம்போ செந்திலுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இவரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், அவர் தற்போது தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த தென்னரசு என்பவரை, கடந்த 2015-ம் ஆண்டு தாமரைப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கொலை செய்தனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் கூட்டாளியான பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டிவருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாம் சரவணன் தென்னரசுவின் சகோதரர் ஆவார்.

காங்கிரஸ் நிர்வாகி: இது ஒருபுறமிருக்க, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திரைமறைவில் உதவியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வட சென்னையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரையும் இந்த கொலை வழக்கில் போலீஸார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x