கள்ளக்குறிச்சி சம்பவம்: பாஜக மாநிலச் செயலர் எஸ்.ஜி.சூர்யாவிடம் சிபிசிஐடி விசாரணை

எஸ்.ஜி.சூர்யா | கோப்புப்படம்
எஸ்.ஜி.சூர்யா | கோப்புப்படம்
Updated on
1 min read

விழுப்புரம்: “உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவத்தையும், அது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் குறித்தும் தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சனிக்கிழமை நேரில் ஆஜரானார்.

எக்ஸ் தளத்தில் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட கருத்து
எக்ஸ் தளத்தில் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட கருத்து

அவரிடம் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சிபிசிஐடி அலுவலகம் அருகில் குவிந்தனர். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் எஸ்.ஜி சூர்யா கூறியது, “உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in